ஆண்டுதோறும் குறைந்து வரும் குறுவை சாகுபடி: ஜூன் 12-இல் தண்ணீர் திறக்கப்படுமா ? விவசாயிகள்  எதிர்பார்ப்பு

காவிரியில் குறித்த காலத்தில் தண்ணீர் வராததால் டெல்டாவில் ஆண்டுக்கு ஆண்டு குறுவை சாகுபடியின் பரப்பளவு குறைந்து வருகிறது.

காவிரியில் குறித்த காலத்தில் தண்ணீர் வராததால் டெல்டாவில் ஆண்டுக்கு ஆண்டு குறுவை சாகுபடியின் பரப்பளவு குறைந்து வருகிறது. நிகழாண்டு குறுவைக்கு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 
டெல்டா மாவட்டத்தில் கடைகோடி பகுதியாக விளங்கி வரும் சீர்காழி பகுதியில் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த காலங்களில் 8 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற்று வந்தது. நீர்ப்பற்றாக்குறை இல்லாத காலங்களில் முப்போக சாகுபடி சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவைக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். வறட்சி மற்றும் பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை முற்றிலும் பொய்த்தது. 
2012-இல் செப்.17, 2013-இல் ஆக. 2, 2 014-இல் ஆக.10, 2015-இல் ஆக. 9, 2016-இல் செப் 20, 2017-இல் அக். 2 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழகத்துக்குரிய நீரை கர்நாடகம் தர மறுப்பதால் தொடர்ச்சியாக கடந்த 6 ஆண்டுகளாக வழக்கத்தை விட தாமதமாக தண்ணீர் திறப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் குறுவை முற்றிலும் பொய்த்தது.  இதற்கிடையில், சீர்காழி பகுதியில் கடந்த ஆண்டு போர்செட் மூலம் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்றது. நிகழாண்டு இதுவரை ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடந்துள்ளதாக வேளாண் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் குறுவை சாகுபடி என்பது இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து விளந்திடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வாகீசன் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர்  அணையிலிருந்து திறக்கப்படும் நீரைக்கொண்டு குறுவை சிறப்பாக நடைபெற்றது. அத்துடன், நிலத்தடி நீர் போதிய அளவில் இருந்ததால் குறுவையை விவசாயிகள் முனைப்புடன் செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சி, நிலத்தடி நீர் குறைவு, கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு, மேட்டூரிலிருந்து தாமதமாக தண்ணீர் திறப்பு போன்ற காரணங்களால் குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வருவதில்லை. மேலும், நெல்லுக்கு உரிய விலை இல்லாததும் ஒரு காரணம். 30 சதவீத சிறு விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்கின்றனர் என்றார் அவர். 
கொள்ளிடம் பகுதியில்: இதேபோல், கொள்ளிடம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 10 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்து வந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தற்போது இப்பகுதியில் குறுவை சாகுபடியின் பரப்பளவு குறைந்து விட்டது. இப்பகுதியில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்த இலக்கான 2,600 ஹெக்டேர் பரப்பளவு சாகுபடியை நிகழாண்டும் செய்ய விவசாயிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 
இதுவரை ஆயிரம் எக்டேர் பரப்பில் குறுவை நடவு செய்யப்பட்டுள்ளது. குறுவையை தொடரும் வகையில் விவசாயிகள் தற்போது, நாற்றங்கால் தயாரித்து நாற்றுப்பிடுங்கி நடவும் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  
இதுகுறித்து கொள்ளிடம் விவசாய சங்கச் செயலர் விஸ்வநாதன் கூறியது: கொள்ளிடம் பகுதியில் கீழணையிலிருந்து தெற்கு ராஜன் வாய்க்கால் மூலம் 15 ஆயிரம் ஏக்கரிலும், புதுமண்ணியாறு பாசனம் மூலம் 15 ஆயிரம் ஏக்கரிலும் சம்பா, குறுவை சாகுபடி நடைபெற்று வந்தது. தற்போது, சம்பாவுக்கே தண்ணீர் இல்லாத நிலையில் குறுவை சாகுபடி என்பதை  விவசாயிகள் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்றார் அவர். 
குறுவை சாகுபடி குறைந்துபோனதால் விவசாயத் தொழிலையே நம்பி பிழைத்து வரும் விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு  அரசு நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். எனவே, ஆண்டுதோறும் குறுவை சாகுபடியின் பரப்பளவு குறைந்து வருகிறது என்பது வேதனை. நிகழாண்டு குறுவையை தீவிரமாக தொடங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com