வேதாரண்யம் பகுதி ஆறுகளில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் அல்லி மலர்கள் பூத்துக் குலுங்குவதுடன், தண்ணீர் ஆவியாவதைத் தடுக்கும் அரணாவும் இருந்து வருவதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
காவிரி பிரச்னை, இயற்கை வஞ்சிப்புகளால் கடந்த பல ஆண்டுகளாக நீர்நிலைகள் வற்றி விவசாயத்துக்கு மட்டுமன்றி குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டது. வருண பகவான் அவ்வப்போது காட்டும் கருணையால் பயன்பாட்டுக்கு ஓரளவு தண்ணீர் கிடைத்து வருகிறது. தண்ணீர் பஞ்சத்தால் மனிதர்கள், கால்நடைகள் மட்டுமன்றி பூச்சியினங்களும், தாவர இனங்களும் பாதிக்கப்பட்டன. வழக்கம்போல், காவிரி பிரச்னை, போதிய மழையின்மை என்பது நிகழாண்டும் தொடர் கதை என்றாலும், 2017-ஆம் ஆண்டு இறுதியில் பெய்த மழையால் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியது. அந்த வகையில், வேதாரண்யம் பகுதிகளில் உள்ள மானங்கொண்டான், முள்ளியாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதில்தான் தற்போது அல்லி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
20 ஆண்டுகளுக்குப் பிறகு: மானங்கொண்டான், முள்ளியாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் தற்போது, ஆங்காங்கே அடர்த்தியாக வெண்ணிற அல்லி லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்குகின்றன. இம்மலர்கள் காலை 10 மணி வரையில் மலர்ந்தும், பின்னர் குவிந்து மொட்டு போலவும் காட்சியளிக்கின்றன.
மானங்கொண்டான் ஆற்றில் மருதூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட இடங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் அல்லி மலர்கள் மலர்ந்துள்ளன. இதேபோல், முள்ளியாற்றின் வடிநிலப் பகுதியான வாய்மேடு - பஞ்ச நதிக்குளம் பகுதியிலும் அல்லி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறு கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டதும், நவம்பரில் பெய்த கனமழையால் தண்ணீர் காலத்தில் தேங்கியதும் இத்தாவரம் அதிகமாக வளர வாய்ப்பாக இருந்துள்ளது.
தற்போதும் ஆற்றில் ஓரளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், வழக்கமாக வெங்காயத் தாமரை, வேலிகாத்தான் ஆகிய களைச்செடிகளின் புதர் ஆக்கிரமிப்பு குறைந்துள்ளதால், அல்லி மலர்கள் தனித்த அடையாளத்தோடு காணப்படுவது பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
தண்ணீர் ஆவியாவதைத் தடுக்கும் அரணாகவும் திகழ்கிறது
நீர் நிலைகளில் காணப்படும் தாமரையைப்போல அல்லி ஒத்துக்காணப்பட்டாலும், தண்டு (கொடி), இலை, பூ என அனைத்தும் சிறிய அளவில் வேறுபட்டிருக்கும். தாமரை காலையில் மலர்ந்து மாலையில் மொட்டுப்போல குவிந்துவிடும். அல்லி இனம் இரவில் மலர்ந்து, காலையில் குவியும் சிறப்புடையது.
அல்லியின் இலைகள் தாமரையைப்போல தண்ணீரின்மேல் படந்து காணப்படுவதால், சூரியனின் கடுமையான வெப்பத்தில் நீர் வேகமாக ஆவியாவதைக் குறைத்து இயற்கை அரணாக இருந்து வருகிறது. நீர் நிலைகளில் வளர்ந்து காணப்படும் அல்லி கொடிகளில் சிவப்பு மற்றும் வெண்ணிறத்தில் பூக்கும் அல்லிகள் சிறப்பானவை. சங்க இலக்கியங்களில் வரும் பூக்களில் அல்லி மலர்களும் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.