கூத்தாநல்லூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கூத்தாநல்லூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி உள்ள பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும்
Updated on
2 min read

கூத்தாநல்லூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி உள்ள பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூரில், திருவாரூர்- மன்னார்குடி பிரதான சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு11 கடைகள் உள்ளன. மேலும், பயணிகள் தங்குமிடம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியும் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில மாதங்களே இந்த பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து சென்றன.
பின்னர், பயன்படுத்தப்படாமல், பராமரிப்பின்றி உள்ளது. தற்போது, இந்த பேருந்து நிலையத்தைச் சுற்றிலும், குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பை மேடாக காட்சியளிக்கிறது. ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் இங்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில், பெரும்பாலான பகுதிகள் உடைந்து, மேல்பகுதியின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சமூக விரோதிகள் இங்கு மது குடித்துவிட்டு, பாட்டில்களை அங்கேயே உடைத்துப் போட்டுள்ளனர்.
இந்த பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால், நகராட்சிக்கும் வருமானம் கிடைப்பதுடன், லெட்சுமாங்குடி பாலத்தில், போக்குவரத்து நெருக்கடியும் குறையும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் கூறியது: கடந்த 1994- ஆம் ஆண்டு, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலைய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது பயன்பாடின்றி உள்ளதால், பொறியாளர் உதவியுடன் ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளைச் செய்ய வேண்டும்.
புதிய பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத் துறை அதிகாரிகளிடம் பேச வேண்டும். அதன் பிறகுதான், பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
"இந்த பேருந்து நிலையத்தைசுற்றிலும், குப்பைகள்
கொட்டப்பட்டு, குப்பை மேடாக காட்சியளிக்கிறது. கட்டடத்தில், பெரும்பாலான பகுதிகள் உடைந்து, மேல்பகுதியின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியேதெரிகின்றன. சமூக விரோதிகள் இங்கு மது குடித்துவிட்டு, பாட்டில்களை அங்கேயே உடைத்துபோட்டுள்ளனர்.
இந்த பேருந்து நிலையத்தைசீரமைத்து மீண்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால், நகராட்சிக்கும் வருமானம் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம். சுதர்ஸன்:
கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள இந்த பேருந்து நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இங்குள்ள கடைகள் திறக்கப்பட வேண்டும். அனைத்து பேருந்துகளும், பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கிருந்து மன்னார்குடி, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அப்போதுதான், புதிய பேருந்து நிலையத்திற்குள் மக்கள் வருவார்கள் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்நகரச் செயலாளர் தாஜூதீன்:
கூத்தாநல்லூரில், வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள், ஒதுங்க இடம் இல்லாமல் வெயிலிலும், மழையிலும், பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து, அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கிருந்து திருத்துறைப்பூண்டி, வடபாதிமங்கலம், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என்றார்.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் எஸ்.எம். சமீர்:
சின்ன சிங்கப்பூர் என்ற பெயர் பெற்ற கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். திருவாரூரிலிருந்து வரக்கூடிய அனைத்துப் பேருந்துகளும், இந்த பேருந்து நிலையத்துக்குள், சென்றுவர வேண்டும். கூத்தாநல்லூரிலிருந்து, சென்னைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகளை காலையிலும், இரவிலும் இயக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com