முள்ளியாற்றில் தண்ணீரை வீணாக்குவதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மீன்பிடிப்பதாகக் கூறி, முள்ளியாற்றில் ஆயில் எஞ்சின் மூலம் தண்ணீரை இறைத்து வீணாக்குவதைத்
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மீன்பிடிப்பதாகக் கூறி, முள்ளியாற்றில் ஆயில் எஞ்சின் மூலம் தண்ணீரை இறைத்து வீணாக்குவதைத் தடுத்து நிறுத்தவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி வழியே கடலில் இணையும் முள்ளியாறு பாசனம் மற்றும் முக்காலுக்கானது. இந்த ஆற்றின் தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்குக் கீழ் உள்ள பகுதியானது, தாழ்வான நில அமைப்பைக் கொண்டுள்ளது.
இதனால், இயல்பாகவே இந்த பரப்பு கோடைக் காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் தன்மையைப் பெற்றுள்ளது. 
அத்துடன், தகட்டூர் இயக்கு அணைக்குக் கீழ் உள்ள ஆற்றின் பரப்பு, மராமத்துப் பணியையொட்டி விவசாயிகளே மண் எடுத்துக்கொள்ள கடந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்டதால், ஆங்காங்கே ஆழம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஆற்றில் வாய்மேடு- பஞ்சநதிக்குளம் ஊராட்சிகள் இடையேவுள்ள பரப்பில் சுமார் 6 அடி உயரம் வரையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் காணப்படுகிறது.
 இந்த ஆற்றில் மீன் பாசி குத்தகை எடுப்போர், கோடையில் தண்ணீரை இறைத்து வெளியேற்றிவிட்டு மீன்பிடிப்பர். கடந்த ஆண்டில் தண்ணீரின்றி, ஆறு வறண்டு போனதால் இந்த நிலை தவிர்க்கப்பட்டது.
நிகழாண்டில், கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், முள்ளியாற்றில் தண்ணீர் இருப்பதால், பொதுமக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகிறது. இதேபோல், வெப்பத்தை எதிர்கொள்ள முடியாமல் எருமை மாடுகளும் ஆற்றில் தஞ்சம் புகுகின்றன. அத்துடன், நிலத்தடி நீர்வளமும் பாதுகாக்கப்படுகிறது.  எனினும், இந்த ஆற்றில் மீன் குத்தகை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், குத்தகைதாரர்களால் மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து, வீணாக்கப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 
ஆகையால், மழைக்காலம் வரை முள்ளியாற்றில் தண்ணீரை ஆயில் எஞ்சின் மூலம் இறைத்து வீணாக்குவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com