வடகிழக்குப் பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில் அளக்குடி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதால், வெள்ளம் வந்தால் தாக்குபிடிக்குமா என்ற அச்சத்தில் உள்ள 15 கிராம மக்கள் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால், கர்நாடகம் திறந்து விட்ட உபரி நீரால் மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து, அதிகளவில் நீர் வந்து கொண்டிருந்ததால், மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விட்ட நீர் திருச்சி முக்கொம்பை வந்தடைந்து, அங்கிருந்து கொள்ளிடம் ஆறுகளில் உபரி நீராக திறந்து விடப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3 லட்சம் கன அடி வரை தண்ணீர் சென்றதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆர்ப்பரித்து சென்ற வெள்ள நீர் கொள்ளிடம் ஆற்று வழியாக பழையார் கடலில் சென்று கலந்தது.
இந்நிலையில், சீர்காழி அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் தண்ணீர் மோதி திரும்பும் இடத்தில் கடந்த 2011 -ஆம் ஆண்டில் ரூ. 66 கோடி செலவில் 1,200 மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் (பைல்ஸ்) அமைக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்புச்சுவர் அதிகளவு வேகமாக ஆற்றில் சென்ற வெள்ளத்துக்கு தாக்குபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், கடந்த ஆக.18-ஆம் தேதி இரவு தண்ணீர் வேகமாக மோதி சென்றதால் தடுப்புச் சுவர் உடைந்து கரை சேதமடைந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு கரை அரிப்பு ஏற்பட்ட இடத்தை சீரமைக்கும் முயற்சியாக மணல் மூட்டைகளையும், சவுக்கு கம்புகளை வைத்து சீரமைத்தனர். ஆனால், அதன் பின்னரும் கரையில் மற்ற பகுதிகளில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, 16 லோடு பாறாங்கற்கள்,பெரிய கருங்கற்கள் லாரிகளில் கொண்டுவரப்பட்டு கரை உடைப்பு ஏற்பட்ட இடங்களில் கொட்டி மேலும் உடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பணி நடைபெற்றது. இப்பகுதியில் 5 இடங்களுக்கு மேல் உடைப்பு ஏற்பட்டதுடன், அதிக எடையில் கருங்கற்கள் லாரி மூலம் கொண்டுவந்ததில் கரை மேலும் பலவீனமடைந்து ஆற்று நீரின் வேகத்தை தாங்காமல் கான்கிரீட் பீம் உடைந்து நீருக்குள் விழுந்தது. இதனால், தண்ணீர் புகுந்து கரை 25 அடி நீளத்துக்கு ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதில், கரையின் மேல் போடப்பட்டிருந்த 10 அடி அகலமுள்ள தார்ச் சாலை 7 அடி அகலத்துக்கு இடிந்து விழுந்தது.
இதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறையினர் 200-க்கும் மேற்பட்ட பனை மரங்களை அருகில் உள்ள கிராமங்களிலிருந்து வெட்டி எடுத்து வந்து கரையோரங்களில் ஆப்புபோல் அடித்து தண்ணீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி கரை அரிப்பை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினர்.
இந்த தற்காலிக சீரமைப்பு பணிக்கு சுமார் ரூ. 1 கோடி வரை செலவழிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனாலும், கொள்ளிடம் ஆற்று அளக்குடி கரை நிரந்தரமாக சீரமைக்கப்படவில்லை. இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை அதிகம் பெய்யும் என கூறப்படுகிறது. அவ்வாறு அதிக மழை பெய்து மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதை, அளக்குடி தற்காலிக கரை சீரமைப்பு பணி தாக்குப்பிடிக்குமா என தெரியவில்லை.
கான்கிரீட் பைல்ஸ் கட்டுமானமே தண்ணீரின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்காத போது, பனைமரம் ஆப்பு கைகொடுக்குமா என்பது கேள்விக்குறியே !. கடந்த 2005-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அளக்குடியில் உடைப்பு ஏற்பட்டு 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.
ஆகவே, வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அளக்குடி கொள்ளிடம் ஆற்று கரை நிரந்தரமாக தடுப்புச் சுவர் அமைத்து சீரமைக்க காலஅவகாசம் குறைவாக உள்ளதால் அளக்குடி, காட்டூர், மகேந்திரப்பள்ளி, முதலைமேடு, ஆரப்பள்ளம், நல்லூர், பழையபாளையம், மாதானம், கோதண்டபுரம், தாண்டவன்குளம், பவுசுபேட்டை, புதுப்பட்டிணம்,புளியந்துறை உள்ளிட்ட பாதிக்கப்படும் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் பருவமழை காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.