வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வழிகாட்டி எனக்கூறி மிரட்டி பணம் பறிக்கும் செயலைத் தடுக்க இந்து அறநிலையத்துறை மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகிஅம்மன் சமேத வைத்தியநாதசுவாமி கோயிலில் தனிச் சன்னிதியில், செல்வமுத்துக்குமார சுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயில், செவ்வாய் பரிகார தலம் மற்றும் நோய்த் தீர்க்கும் தலமாக இருப்பதால் தமிழகம் மட்டுமன்றி வெளிமாநில பக்தர்களும் நாள்தோறும் ஏராளமாக வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்கின்றனர்.
பரிகார பூஜைகளுக்கும், சுவாமி தரிசனம் செய்யவும் வரும் வெளியூர் பக்தர்களைக் குறிவைத்து வழிகாட்டி (கைடு) எனக் கூறி சிலர் பக்தர்களை அணுகி கோயிலுக்கு அழைத்துச் சென்று பரிகார அர்ச்சனைகள், சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம் என பவ்யமாக பேசி கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். அர்ச்சனைகள், தரிசனம் முடிந்த பிறகு அழைத்து செல்லப்பட்ட வெளியூர் பக்தர்களிடம் எதிர்பார்க்காத மிக அதிகமான தொகையை கட்டணமாக தரவேண்டும் என கண்டிப்புடன் மிரட்டி ஏமாற்றி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியிடம் வழிகாட்டி ஒருவர் அர்ச்சனை பொருள்கள் வாங்கி செல்லுங்கள் என பேசி, பிறகு கோயிலில் சிறப்பு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி பெற்றுத் தருகிறேன் எனக்கூறி அழைத்து சென்று விட்டு, தரிசனம் முடிந்த பிறகு அந்த பக்தரிடம் 5 அர்ச்சனைக்கு ரூ. 1,500 கட்டணமாக தரவேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசி தொகையைப் பெற்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்த்திராத அந்த தம்பதி சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனவேதனையுடன் ஏமாற்றப்பட்டதை வெளியில் இருந்த காவலரிடம் புலம்பியவாறு சென்றனர். இதேபோல், நாள்தோறும் வெளியூர் பக்தர்கள் வழிகாட்டிகளிடம் அதிக பணத்தைக் கொடுத்து ஏமாந்து செல்கின்றனர். இதைத்தடுக்க கோயில் நிர்வாகம் மற்றும் வைத்தீஸ்வரன் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கோயில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியது: வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் மற்றும் பரிகார பூஜை செய்ய பல்வேறு பகுதிகளிலிருந்து திராளன பக்தர்கள் வருகின்றனர். பரிகார பூஜைகள் செய்யும் பக்தர்கள் 5 அர்ச்சனைகள் செய்து சுவாமியை தரிசனம் செய்வர். சிலர் அங்காரகன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும் வழிபாடு செய்வது உண்டு.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேரடியாக தாங்களாகவே அர்ச்சனை பொருள்களை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு சன்னிதியிலும் எளிதாக அர்ச்சனை செய்து மனம்குளிர சுவாமி தரிசனம் செய்யலாம். கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் சமமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். ஆகையால், பக்தர்கள் விழிப்புணர்வுடன் யாரையும் அணுகாமல் தாங்களாகவே குடும்பத்துடன் நேரடியாக சுவாமி தரிசனம் செய்யவேண்டும் என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கூறியது: நவகிரக தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன்கோயிலுக்கு பரிகார பூஜைகளுக்கு வரும் பக்தர்களை வழிகாட்டிகள் எனும் பெயரில் சிலர் அதிக கட்டணம் வாங்கிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்ய வைக்கின்றனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பின்னரே இந்த வழிகாட்டிகள் அர்ச்சனை பொருள்கள், மாலை, வஸ்திரம் என துண்டு சீட்டில் ரூ. 2ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை எழுதிகொடுத்து தொகையைப் பெற்றுவிடுகின்றனர். 5 சன்னிதிகளுக்கு அர்ச்சனைகள் செய்ய மாலைகள் வாங்குவது உள்பட ரூ. 500 மட்டுமே செலவாகும். ஆனால் அதிக தொகை வாங்குவது தரிசனம் செய்யவரும் பக்தர்களிடம் வழிப்பறி செய்வது போன்றதாகும். இதைத் தடுக்க கோயிலில் கண்காணிப்பு குழுவினரை அமைக்கவேண்டும் என்றார்.
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோயில் காவலர் கூறியது: வைத்தீஸ்வரன் கோயிலில் இதுபோல் வழிகாட்டிகளிடம் பக்தர்கள் அதிகளவு தொகையை கொடுத்து ஏமாறுவது தொடர் கதையாகியுள்ளது. பாதிக்கப்படும் பக்தர்கள் வெளியூர் என்பதால் காவல் நிலையத்தில் புகார் தர தயங்குகின்றனர். தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு புறப்படத்தான் முயல்கின்றனர். கோயிலிலே பிற பக்தர்களிடம் புலம்பிவிட்டு செல்கின்றனர். யாரும் புகார் தர வருவதில்லை. புகார் வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
எனவே, வெளியூர் பக்தர்கள் வழிகாட்டி எனும் பெயரில் யாரேனும் தங்களை அணுகினால் அவர்களிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையாக இருந்து, தாங்களாகவே கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், வழிகாட்டி எனும் பெயரில் சுற்றித்திரியும் ஏமாற்றுபவர்களிடம் தொகையை இழக்க நேரிடும். இதற்கிடையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்து விட்டு, தங்களது பொருளாதாரத்தை இழக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.