வேதாரண்யத்தில் இயல்பு நிலை திரும்பியது

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, சேதப்படுத்தபட்ட
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, சேதப்படுத்தபட்ட அம்பேத்கர் சிலைக்குப் பதிலாக, புதிய சிலையை ஒரே நாள் இரவில் மாவட்ட நிர்வாகம் அமைத்துக்கொடுத்ததையடுத்து, அங்கு பதற்றம் தணித்து, இயல்புநிலை திரும்பியது.
வேதாரண்யத்தில் இருபிரிவினருக்கிடையே ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மோதல் தொடர்பாக கார் தீ வைத்து எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த அம்பேத்கரின் முழு உருவச் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால், வேதாரண்யத்தில் பதற்றம் ஏற்பட்டது.  அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் வரதராஜன், தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாதுகாப்புக்காக 750-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கரின் சிலைக்குப் பதில் அதே இடத்தில் புதிய சிலையை நிறுவ, மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஏற்கெனவே புதிதாக வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த அம்பேத்கர் சிலை, இரவோடு இரவாக வேதாரண்யத்துக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர், திங்கள்கிழமை அதிகாலையில் வேதாரண்யம் பேருந்து நிலைய வளாகத்தில் அம்பேத்கர் சிலை இருந்த அதே பீடத்தில் புதிய சிலை நிறுவப்பட்டது. தமிழ அரசின்  இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். புதிதாக நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதையடுத்து, வேதாரண்யம் பகுதியில் இயல்புநிலை திரும்பியது. திங்கள்கிழமை அனைத்துக் கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்தும் சீரடைந்தது. இருப்பினும், அசம்பாவித சம்பவம் மீண்டும் நிகழாமலிருக்க அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
28 பேர் கைது...
இப்பிரச்னை தொடர்பாக, வேதாரண்யத்தில் திங்கள்கிழமை  தஞ்சை சரக டிஐஜி ஜெ.லோகநாதன் செய்தியாளர்களிடம் 
கூறியது:
மோதல் தொடர்பாக, இருபிரிவினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் அதே இடத்தில் புதிதாக அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனால், அமைதி திரும்பியது. தற்போது, வேதாரண்யம் பகுதியில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட 750 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

தலைவர்கள் கண்டனம்
வேதாரண்யத்தில் அம்பேத்கர் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து நிலைய பகுதியில் இருந்த அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது.  
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com