நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு விவசாயிகளுக்கு உடனடியாக தொகை வழங்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குறித்த காலத்தில் மேட்டூர் அணை திறக்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பான சாகுபடி அளவை எட்ட முடியாத நிலை நீடித்து வருகிறது. காவிரியில் நீர்வரத்து இல்லாமல் இருப்பது, நிலத்தடிநீர் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் சாகுபடி பணியை மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு தாமதம் ஏற்படுகிறது. விவசாயத்துக்கு போதிய நீரின்றி பல்வேறு பிரச்னைகளையும், இன்னல்களையும் எதிர்கொள்ளும் விவசாயிகள் உணவு மற்றும் பணத் தேவைகளுக்காக விவசாயம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில், 2018 சம்பா பருவத்தில் இயல்பான வகை சாகுபடி, திருந்திய நெல் சாகுபடி மற்றும் பாய் நாற்றங்கால் முறையில் நடவுப் பணிகள் நடைபெற்றன. அண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் நெற்பயிர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், இயல்புக்கு மாறாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாகை வருவாய் வட்டத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பெருமளவு நஷ்டமடைந்துள்னர்.
நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடிப் பருவத்துக்கு 1,31,500 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 47,441 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 15,053 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 7,869 ஹெக்டேரில் இயல்பான முறையிலும் நடவுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில், பரவலாக சம்பா அறுவடைப் பணிகள் நடைபெறுகின்றன. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக மாவட்டத்தில் 272 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஜனவரி 9-ஆம் தேதி திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 1.20 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2.40 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரியத் தொகை தாமாதமாக வழங்கப்படுவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளால், கொள்முதல் பணிகள் தாமதமடைந்து வருவதாகவும் நாகை மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
நெல் கொள்முதல் பணியில் உள்ள ஊழியர்கள் நெல் கிலோவுக்கு ரூ.1 வீதம் எடை போடுவதற்கு முன்பாகவே பெற்றுக் கொண்டு எடை போடுகின்றனர் என்றும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்துவதில்லை என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரியத் தொகை கால நீட்டிப்பு செய்து விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால் பொருளாதார ரீதியாக பல்வேறு இழப்புகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வங்கிகள், தனி நபர்கள், நிதி நிறுவனங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் முழுவீச்சில் நடைபெறவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகையை விரைந்து வழங்க நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகையை உடனடியாக வழங்குவதே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மன ஆறுதலை தரும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கீழ்வேளூர் வட்டத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறியது: கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக வங்கிக் கணக்கில் தொகை செலுத்தாததால் விவசாயிகள் தங்களது பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
இதுகுறித்து, விவசாயி வி. ராமேஷ் கூறியது: நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒவ்வொன்றிலும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 800 சிப்பம் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக அனுப்பமுடியவில்லை. நாளொன்று குறைந்தபட்சம் 1000 சிப்பங்களாவது கொள்முதல் செய்யவேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் எடை வைப்பதற்கு முன்னதாகவே பணம் வாங்குவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எடைபோடுபவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மூட்டைக்கு ரூ.1.60 பைசா என்பதை கூடுதலாக்கி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து, விவசாயி என். பொன்மணி கூறியது : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல் குவிண்டால் ரூ. 1,840-க்கும், பிற ரக நெல் குவிண்டால் ரூ.1,800-க்கும் கொள்முதல் செய்யப்படுகின்றன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல் ரகங்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுசென்று உலர வைத்தும், பதறுகளை நீக்கியும், சுத்தப்படுத்தியும் வழங்குகின்றோம் . இத்தகைய சூழ்நிலையில் கொள்முதல் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் எவ்வளவு நெல் எடை வைக்கப்படுகிறதோ அதற்கு கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டுதான் எடை வைக்கவே தொடங்குகின்றனர்.
இதுகுறித்து, முறையிட்டால் எடை வைக்க காலதாமதம் செய்கின்றனர். மேலும் விவசாயிகள் கொண்டு வந்த நெல் தரமற்றவையாக உள்ளன எனக் கூறி வெளியேற்றவும் முயற்சிக்கின்றனர். இத்தகைய சூழலில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக் குரிய தொகையை உடனடியாக வழங்கப்படுவதில்லை. இதன்காரணமாக கடன் வாங்கியும், நகைகள், பொருள்களையும் அடமானம் வைத்தும் விவசாயம் செய்த விவசாயிகள், கூடுதல் சுமையை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி கூறியது: விவசாயிகள் அனைவரும் ஒரே வங்கியில் கணக்கி வைத்திருப்பதில்லை. வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதாலும், விவசாயிகளின் வங்கி ஆவணங்கள் முறையாக சரிபார்த்தப் பின்னரே தொகை செலுத்தப்படுகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.