கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கும் அரசின் வீடுகள் கிடைக்குமா?

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில், அரசு சார்பில் கட்டப்படவுள்ள கான்கிரீட் வீடுகள், கோயில்
Updated on
2 min read

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில், அரசு சார்பில் கட்டப்படவுள்ள கான்கிரீட் வீடுகள், கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கும் பயனளிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கிடைக்க ஏதுவான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நள்ளிரவு வேதாரண்யத்தில் கரையைக் கடந்த கஜா புயலின் கோரத்தாண்டவத்தால், லட்சக்கணக்கான குடும்பத்தினர் தங்களது வீடுகளை இழந்து அரசின் முகாம்களில் தங்க நேர்ந்தது. சில இடங்களில் பயணிகள் நிழலகம், சாலையோரம் என நாடோடிகளைப் போல திறந்தவெளியில் சமையல் செய்து பொதுமக்கள் அவதியுற்றனர்.
புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, நிவாரணப் பொருள்களை விநியோகித்ததோடு, அரசு சார்பில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார். 
மத்திய அரசின் சார்பில் ஆய்வுசெய்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் பணியை விரைவுபடுத்தவும், நடைமுறை பிரச்னைகளைத் தவிர்க்க கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பட்டா இல்லாமல் பயனற்றுப் போகும் திட்டங்கள்: இந்திரா குடியிருப்புத் திட்டத்தின்கீழ், தொடக்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு அரசே தொகுப்பு வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. மங்களூரு ஓடுகளைப் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடுகள், பின்னாளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றி அமைக்கப்பட்டன. காலப்போக்கில் எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர் அல்லாது மற்ற வகுப்பினரும் இத்திட்டத்தின்கீழ் பயனடைந்தனர். முன்பு ஒப்பந்ததாரர்கள் மூலம் அரசே கட்டிக் கொடுத்து வந்த இந்த வீடுகள், தற்போது பெரும்பாலான இடங்களில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. மாற்றுக் குடியிருப்புகள் இல்லாத நிலையில் ஆபத்தையும் பொருள்படுத்தாமல், ஏழை, எளிய மக்கள் அந்த வீடுகளிலேயே தஞ்சம்புகுந்துள்ளனர். 
வீடுகளின் மதிப்பீடு அதிகரிப்பு: இந்திரா குடியிருப்புத் திட்டம் தவிர தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமை வீடு திட்டம், மத்திய அரசின் வீடுகட்டும் திட்டம் போன்ற திட்டத்தின்கீழ் பாதுகாப்பான வீடுகளை பயனாளிகளே கட்டிக்கொள்ள தற்போது வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், இதில் உள்ள நிபந்தனைகளால் பல இடங்களில் ஏழை, எளியோர் பயன்பெறுவதில்லை.
பயன்படாத நிலை : ஒவ்வொரு நிதியாண்டின்போதும் மக்கள்தொகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளில், குறிப்பிட்ட சதவீத வீடுகள் பெரும்பாலான ஒன்றியங்களில் பயனாளிகளுக்குச் சென்றடைவதில்லை. பயனாளிகளே வீடுகளைக் கட்டிக்கொள்ளும் அளவுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமை, மனைப்பட்டா இல்லாமை போன்ற காரணிகளால் கிடைத்த வாய்ப்பை பலர் இழக்க நேரிடுகிறது.
இதேபோல், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், மதிப்பீட்டுத் தொகை ரூ.1.70 லட்சம் மட்டுமே அளிக்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் மக்களுக்கு இந்தத் திட்டம் பயனளித்தாலும், கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை ஈடுசெய்ய இயலாமல் கைவிடப்படுகிறது.  
ஆறுதல் அளிக்கும் அறிவிப்பு : இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. பட்டா இல்லாதவர்களுக்கும், கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என பேரவையில் துணை முதவலர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு, பட்டா இல்லாதவர்களுக்கு ஆறுதலைத் தருகிறது. அதேவேளையில், பட்டா இல்லாதவர்களுக்கு வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகளாகக் கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பு நடைமுறையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதாக அமைகிறது.
பயனாளிகளில் பெரும்பாலானோர் விவசாயம், விவசாயத் தொழிலாளர்களாகவே உள்ளனர். வீடுகளின் அருகிலேயே அவர்களது வாழ்வாதாரம் சார்ந்த ஆடு, மாடு, கோழி என கால்நடைகள், மரங்கள், காய்கறித் தோட்டம் போன்றவை இருப்பதால், அவற்றை பரமாமரிக்கும் நிலையில், அடுக்குமாடி வீடுகள் ஏற்றதாக அமையுமா?  என்பது கேள்விக்குறி.
கோயில் நிலங்களில் பட்டா? : அரசு நிலம், நீர்நிலை, புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் அரசின் விதிகளின்படி பட்டா பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இது ஒருபுறம் என்றாலும் கோயில், மடங்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கும் மனைப்பட்டா கிடைப்பது பிரச்னையாக உள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிகளுக்கு சொந்தமான நிலத்தில் 18,031 குடும்பங்கள் வீடு மற்றும் குடிசைகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இவர்களில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 4,815 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 6,325 பேர். பிற்படுத்தப்பட்டவர்கள் 6,626 பேர். பழங்குடியினர் 96 பேர் மற்றும் இதர வகுப்பினர் 169 பேர் ஆவர்.  குறிப்பாக, வேதாரண்யம் பகுதியில் 7,644 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் மாடி வீடு, ஓட்டு வீடு, கூரை வீடுகள் கட்டிக்கொள்ளவோ, மின் இணைப்பு பெறவோ எந்தவித பிரச்னையும் இல்லை. எனினும், பட்டா இல்லாததால் இப்பகுதி மக்கள் அரசின் திட்டத்தின்கீழ் வீடுகளைப் பெற இயலாத நிலை நீடிக்கிறது. 
வழிகாட்டும் கேரளம் : கேரளத்தில் கோயில் நிலங்களில் வசிப்போருக்கு உதவும் வகையில், அரசே விலை கொடுத்து பயனாளிகளுக்கு மனைப்பட்டா அளித்துள்ளது. இதேபோல், கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு சம்பந்தப்பட்ட ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் அறநிலையத்துறைக்கு உரிய தொகையைச் செலுத்தி, மனைப் பட்டா வழங்கவும், அதே இடத்தில் வீடு கட்டிக்கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com