சொந்த செலவில் குளத்தில் நீர் நிரப்பும் தன்னார்வ இளைஞர்..!

திருக்குவளை அருகே தன்னார்வ இளைஞர் ஒருவர் தன்னுடைய சொந்த செலவில் ஆழ்துளைக் கிணறு மூலம்

திருக்குவளை அருகே தன்னார்வ இளைஞர் ஒருவர் தன்னுடைய சொந்த செலவில் ஆழ்துளைக் கிணறு மூலம் நீர் இறைத்து, அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட வலிவலம் அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன். விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சரவணன், இளம் வயது முதல் தந்தை செய்த முப்போக சாகுபடி பணிக்கு உதவியாக இருந்திருக்கிறார். தவிர, தந்தையுடன் இணைந்து புதிய ரக பயிர்களை சாகுபடி செய்து விவசாயத்தில் பல புதிய புரட்சி செய்துள்ளார். தொடர்ந்து, அண்மையில் இம்மண்ணுக்கு மாற்றான வெள்ளரி, தர்ப்பூசணி உள்ளிட்ட பயிர்களை சோதனை முயற்சிக்காக பயிரிட்டு நல்ல மகசூல் கண்டுள்ளார்.
 தற்போது, நீர் நிலைகளில் நீர் வற்றியதைத் தொடர்ந்து சாகுபடி செய்வது என்பது கேள்விக்குறியாகி, பலர் விவசாயத்தை விட்டு மாற்றுத் தொழிலுக்கு மாறிய இந்தச்சூழலில் விவசாயத்தைத் தொடர்ந்து செவ்வனே செய்ய வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளார் சரவணன்.
காவிரி ஆற்றின் மூலம் கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காதபட்சத்தில், தானே தனது சொந்த செலவில் சுமார் ரூ. 1.80 லட்சம் மதிப்பில் 125 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு வசதி ஏற்படுத்தி, அதன்மூலம் நீர் இறைத்து பருத்தி சாகுபடி செய்து வருகிறார். 
விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தனது ஊர் மக்கள் மீது அளவு கடந்த பற்று வைத்துள்ளார். தற்போது, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அதிலும் குறிப்பாக, காவிரி கடைமடை பகுதியான திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தண்ணீருக்காக தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவிலங்கையைச் சேர்ந்த சரவணன் விவசாயத்துக்குப்போக மீதமுள்ள தண்ணீரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள பொதுக் குளத்துக்கு கால்வாய் வழியாக கொண்டு சென்று நிரப்பியுள்ளார்.
மாவிலங்கை கிராமத்தில் 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த பொதுக் குளத்தைப் பயன்படுத்தி தங்களது அன்றாட நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். தவிர, இப்பகுதி மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள கால்நடைகள் மற்றும் பறவைகளின் நீர்த் தேவையையும் பூர்த்தி செய்வதில் இந்த பொதுக் குளம் முக்கிய அங்கம் வகிக்கிறது.
தன்னலம் பாராமல் கிராம மக்களின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு முழு குளத்தையே தன்னுடைய சொந்த செலவில் நிரப்பிய தன்னார்வ இளைஞர் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். தற்போது, அவருக்கு தோட்டக்கலையின் கீழ் 3 ஏ1 மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்குப் பதிலாக மற்ற மாவட்டங்களில் விவசாயத்துக்கென இலவச மின்சாரம் வழங்குவதுபோல் தனக்கும் வழங்கினால் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மேலும், தன்னைப் போன்ற விவசாயிகளுக்கும் தனது போர்செட் மூலம் இலவச தண்ணீர் வழங்கி சாகுபடி செய்வதற்கு உதவி செய்வேன் 
என்கிறார் சரவணன். 
இதுகுறித்து அவ்வூர் பொதுமக்கள் கூறியது: தண்ணீர் பஞ்சம் என்பது எல்லா ஊரிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், எங்களுக்கு அருகாமையில் உள்ள கிராமங்களும்கூட தண்ணீர் பஞ்சத்தில் உள்ளன. ஆனால், எங்களுக்கு அந்தக் கவலை இல்லை. அதற்கெல்லாம் காரணம் இவ்வூர் தன்னார்வல இளைஞர் சரவணன்தான். 
மேலும், இவர் தன்னுடைய சொந்த செலவில் எங்கள் அனைவருக்காகவும் ஆழ்துளைக் கிணறு மூலம் நீர் இறைத்து குளங்களையும் நிரப்பியுள்ளார். அந்த குளத்தைக் கொண்டு நாங்கள் எங்களுடைய அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். இதையடுத்து, நாங்கள் விவசாயத்தைத் தொடர வேண்டுமானால் இப்பகுதிக்கு விவசாயத்துக்குரிய இலவச மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com