கொடியம்பாளையம் வாக்குச் சாவடியை படகில் சென்ற அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 01st April 2019 07:50 AM | Last Updated : 01st April 2019 07:50 AM | அ+அ அ- |

சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள தீவு கிராமமான கொடியம்பாளையத்தில் உள்ள வாக்குச் சாவடியை படகில் சென்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
கொடியம்பாளையம் கிராமம் ஒரு பக்கம் கொள்ளிடம் ஆறும், மற்ற மூன்று பக்கங்களும் கடல் பகுதியால் சூழப்பட்ட தீவு பகுதியாகும். இக்கிராமத்தில் 516 ஆண் வாக்காளர்கள், 493 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1,009 வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள ஊராட்சி பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடியை ஆய்வு செய்ய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எம். வேலுமணி, (சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி) சீர்காழி வட்டாட்சியர் சபீதாதேவி, தேர்தல் துணை வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் பழையாறிலிருந்து ஒரு படகில் கொள்ளிடம் ஆறு வழியாக முகத்துவாரம் சென்று, கடல் மார்க்கமாக கொடியம்பாளையத்துக்குச் சென்றனர். அங்கு, வாக்குச் சாவடியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.