விவசாயத்தை சீரழிக்கும் திட்டங்கள் ரத்து செய்யப்படும்: மயிலாடுதுறை திமுக வேட்பாளர் வாக்குறுதி
By DIN | Published On : 01st April 2019 07:43 AM | Last Updated : 01st April 2019 07:43 AM | அ+அ அ- |

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயத்தை சீரழிக்கும் திட்டத்தை தடை செய்ய பாடுபடுவேன் என்று மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செ. ராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் வாக்குறுதியளித்தார்.
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் செ. ராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். கஞ்சாநகரம், மேலப்பாதி, கீழையூர், பொன்செய், கிடாரங்கொண்டான், தலைச்சங்காடு, கருவி, சின்னங்குடி, வடகரை, பெரம்பூர், காட்டு ச்சேரி, டி. மணல்மேடு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குச் சேகரித்தார்.
பிரசாரத்தில் அவர் பேசியது:
காவிரி டெல்டாவை சீரழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களான ஹைட்ரோ-கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் ஆகியவற்றை தடை செய்ய பாடுபடுவேன். பூம்புகாரில் மரைன் கல்லூரி அமைப்பதோடு, பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த அந்த நகரை மீண்டும் பழைமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுப்பேன். மீனவர்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.
இந்த பிரசாரத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பி. சீனிவாசன், திமுக மாவட்டத் துணை செயலாளர் மு. ஞானவேலன், ஒன்றியச் செயலாளர் பி.எம் . அன்பு, தகவல் தொடர்பு அணி மாவட்டச் செயலாளர் பி.எம். ஸ்ரீதர், மதிமுக ஒன்றியச் செயலாளர் கொளஞ்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.