மாயமாகும் அரிய வகை மரங்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சீர்காழி அருகே வனத்துறைக்குச் சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பிலான அரிய வகை மரங்கள் மாயமாகி
Updated on
1 min read

சீர்காழி அருகே வனத்துறைக்குச் சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பிலான அரிய வகை மரங்கள் மாயமாகி வருவதால், இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றங்கரையின் வலது கரை சாலையையொட்டி, சரஸ்வதிவிளாகம் கிராமத்திலிருந்து மாதிரவேளூர் வரை சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் வனப் பாதுகாவலர் குடியிருப்பும் உள்ளது. இங்கு வனத்துறை ஊழியர் தங்கி,  24 மணிநேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
 வனத்துறையின் சார்பில் இப்பகுதியில் விலை உயர்ந்த மரங்கள் பயிரிடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இரவு நேரங்களில் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மாதிரவேளூர் கீழ்ச்சாவடிகள் வாய்க்கால் கரையில் இருந்த 30 தேக்கு மரங்கள் சில தினங்களுக்கு முன்பு வெட்டிக் கடத்திச் செல்லப்பட்டது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அம்மரங்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி மாதிரவேளூர் பெரியமதகு அருகே வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான கொடுக்காய்ப்புளி மரங்களை டிராக்டர் மூலம் கடத்திச் சென்றபோது வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதைப் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள் இரவு நேரங்களில் வெட்டிக் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களைத் தீவிரமாகக் கண்காணித்து மரங்களைப் பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com