அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மீனவ குடும்பத்தினர்
By DIN | Published On : 12th April 2019 09:25 AM | Last Updated : 12th April 2019 09:25 AM | அ+அ அ- |

செம்பனார்கோவிலில் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர்.
செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட குமாரமங்கலம், சின்னங்குடி பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் சுமார் 300 குடும்பத்தினர் அதிமுகவிலிருந்து விலகி, நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுகுறித்து, மீனவ மக்கள் கூறியது:
அதிமுக அரசு மீனவ மக்களுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை. தற்போது மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் மீனவர்கள் நலனுக்கான எந்த திட்டமும் தெரிவிக்கப்படவில்லை. அதனால்தான், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தோம். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கத்துக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்வோம் என்றனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் மிசா மதிவாணன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.