மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம்: டிடிவி. தினகரன் வாக்குறுதி
By DIN | Published On : 12th April 2019 07:35 AM | Last Updated : 12th April 2019 07:35 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதியளித்தார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ். செந்தமிழனை ஆதரித்து, மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் வியாழக்கிழமை அவர் பேசியதாவது:
அரசியல் கட்சிகள் மதத்தைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. மக்களின் நலனைப் பற்றித்தான் பேச வேண்டும். தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், இளைஞர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது தேவைகளைப் பற்றி பேச வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை என்பதை மறந்து விட்டு, ஜாதியையும், மதத்தையும் பற்றி பேசி மக்களைப் பிரிக்கப் பார்க்கின்றனர்.
கடந்த தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு, திமுக இந்த தேர்தலை சந்திக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அதனுடன் கூட்டணியில் இருந்த திமுக, மக்களுக்கு எந்தத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதால்தான் 2011-இல் மக்கள் திமுகவை ஆட்சியை விட்டு இறக்கினார்கள். அதன்பிறகு, மீண்டும் திமுகவால் ஆட்சியில் அமர முடியவில்லை. எனவேதான், எப்படியாவது மக்களை ஏமாற்றிவிட வேண்டும் என்பதற்காக திமுக ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே, மதச்சார்பற்றக் கூட்டணி என்று ஏமாற்றுகின்ற பித்தலாட்டக் கூட்டணியையும், மோடி தலைமையிலான துரோகக் கூட்டணியையும் வீழ்த்த, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தமிழனை வெற்றி பெறச் செய்யுங்கள். பாஜக, திமுகவை விட, அமமுகவைத்தான் அதிகம் எதிர்க்கிறார்கள். அதனால்தான் ஒரே சின்னம் பெறுவதற்குகூட உச்சநீதிமன்றம் சென்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறுபான்மையினர், கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதற்காகத்தான் திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைவதற்கும், மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபமும், நீதிமன்ற வளாகத்தில் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமைக்கவும், மயிலாடுதுறை தொகுதியை ஆன்மிக சுற்றுலா மையமாக அறிவிப்பதற்கும், தமிழ்நாடு வக்ஃபு வாரியம் சார்பில் நீடூரில், மருத்துவக் கல்லூரி அமைக்கவும், நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் அமைக்கவும், மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு மீண்டும் ரயில் சேவையை தொடங்கவும், தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்கவும், எங்கள் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுப்போம். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைவதற்கும், மத்தியில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் மாறுவதற்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் செந்தமிழனை வெற்றிபெற செய்யுங்கள் என்றார் அவர்.