சட்டைநாதர் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்
By DIN | Published On : 17th April 2019 01:49 AM | Last Updated : 17th April 2019 01:49 AM | அ+அ அ- |

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உத்ஸவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் பிரமோத்ஸவம் கடந்த 10-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருஞானசம்மந்தருக்கு அம்பாள் ஞானப்பால் வழங்கிய திருமுலைப்பால் வைபவம் 11-ஆம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து, 6-ஆம் நாள் விஸ்வகர்மா மண்டகப்படியான திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் சீர்வரிசைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் விநாயகர், சுவாமி-அம்பாள், திருஞானசம்பந்தர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, பிரம்மபுரீசுவரர் சுவாமி, திருநிலைநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த புஷ்ப அலங்கார மேடையில் வைக்கப்பட்டு, சிவாச்சாரியர்களால் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.சிவாச்சாரியார்கள் மங்கல நாணை பக்தர்கள் முன்னிலையில் அம்பாள் கழுத்தில் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். பின்னர், பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்வுநடந்தது.
முன்னதாக சுவாமி-அம்பாள் கோயிலை வலம்வந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், பஞ்சமூர்த்திகளும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...