கடலில் தத்தளித்த மீனவர்கள் 5 பேர் மீட்பு
By DIN | Published On : 26th April 2019 01:02 AM | Last Updated : 26th April 2019 01:02 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, படகு பழுதானதால், கடலில் தத்தளித்த 5 மீனவர்களை, சக மீனவர்கள் மீட்டு, வியாழக்கிழமை இரவு கரைக்கு அழைத்து வந்தனர்.
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகும் வாய்ப்புள்ளதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன், கபிலன், வேதமூர்த்தி, திருமுருகன், கர்ணன் ஆகிய 5 மீனவர்களும் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். வழக்கமாக, அவர்கள் வியாழக்கிழமை காலை (ஏப்.25) கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் வியாழக்கிழமை மாலை வரை கரைக்குத் திரும்பவில்லை.
இதனால், அவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், படகு பழுதானதால் 5 மீனவர்களும் நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு வியாழக்கிழமை இரவு கரைக்கு அழைத்து வந்தனர்.