பொன்பரப்பி சம்பவம்: காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்
By DIN | Published On : 26th April 2019 05:24 AM | Last Updated : 26th April 2019 05:24 AM | அ+அ அ- |

பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக, சமூக வலை
தளத்தில் தவறான தகவலைப் பதிவிட்டதாக இளைஞர்களை போலீஸார் இரவு நேரத்தில் கிராமங்களுக்குச் சென்று தேடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பொறையாறு அருகே உள்ள எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 15 பேர் பொன்பரப்பி சம்பவம் குறித்து ஒரு பிரிவினரை தவறாக பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதுதொடர்பாக 9 இளைஞர்களை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள 6 இளைஞர்களை தேடி, குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு இரவு நேரத்தில் போலீஸார் சென்று, தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் வட்டச் செயலாளர் பி. சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.