தூய்மை நகரமாகுமா மயிலாடுதுறை?

மயிலாடுதுறை நகராட்சி 2020- ஆம் ஆண்டிலாவது தூய்மை நகராட்சியாக மாறுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தூய்மை நகரமாகுமா மயிலாடுதுறை?
Updated on
3 min read

மயிலாடுதுறை நகராட்சி 2020- ஆம் ஆண்டிலாவது தூய்மை நகராட்சியாக மாறுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2000 அமலில் இருந்த வரை, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், அனைத்து வகையான குப்பைகளையும் அகற்றும் பொறுப்பு நகராட்சியிடமே இருந்தது. மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக,  திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-இன்படி "எமது குப்பை, எமது பொறுப்பு' என்ற கொள்கையுடன் அப்பொறுப்பு அனைவருக்கும் பரவலாக்கப்பட்டது. இந்த விதியில் குப்பைகளை கையாளும் முறை, அதனைப் பாதுகாப்பாக அகற்றும் முறை குறித்து, விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 
பொதுமக்களின் பொறுப்பு: 2016 விதிகளின் படி, வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காக் குப்பை மற்றும் அபாயகரமான வீட்டுக்கழிவுகள் என தரம் பிரித்து, நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு உள்ளது.
 ஈரப்பதம் உள்ள காய்கறி, பழம், மலர், உணவுப்பொருள்கள், இறைச்சி போன்றவற்றின் கழிவுகள் மக்கும் குப்பை எனவும், காகிதம், அட்டைகள், நெகிழி, இரும்பு போன்ற உலர் கழிவுகள் மக்காக் குப்பைகள் எனவும், நாப்கின், இன்சுலின் ஊசி, சிஎப்எல் பல்ப், பாடி ஸ்ப்ரே, மின்சாதனப் பொருள்கள் போன்ற கழிவுகள் அபாயகரமான வீட்டுக்கழிவுகள் என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தரம் பிரித்து ஒப்படைக்காத பொதுமக்களுக்கு, அபராதம் விதிக்கவும், 2016 விதி வழிவகை செய்கிறது. மேலும், 5ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் உள்ள குடியிருப்புகள் மற்றும் திருமணக் கூடங்கள், உணவகங்கள் போன்ற 100 கிலோவுக்கு மேலான மொத்த கழிவு உற்பத்தியாளர்கள்,  தங்களிடம் உருவாகும் மக்கும் குப்பைகளை தாங்களே உரமாக்கிக் கொள்ளவும், மக்காக் குப்பைகளை சுகாதாரப் பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்கவும் 2016-விதி 
அறிவுறுத்துகிறது.
குப்பைக் கிடங்கு:150 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த மயிலாடுதுறை நகராட்சியில், கடந்த 50 வருடங்களுக்கு முன்பு, மயிலாடுதுறை-ஆனந்ததாண்டவபுரம் சாலையில் 4.26 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. ஆனால், இங்கு திடக்கழிவு மேலாண்மை சரியாக பின்பற்றப்படாததால், பல ஆண்டுகளாக குப்பைகள் கொஞ்சம், கொஞ்சமாக தேங்கி, தற்போது 40ஆயிரம் கியூபிக் மீட்டருக்கு மேலான குப்பைகள் அங்கு மலைபோல் குவிந்துள்ளன. இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக, அப்பகுதி மக்கள் தங்களுக்கு சருமநோய், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், பல ஆண்டுகளாக குப்பைகள் தேங்கியுள்ளதால், உருவான மீத்தேன் வாயு அழுத்தம் மற்றும் உராய்வின் காரணமாக அடிக்கடி தீப்பற்றி எரிவதும் வாடிக்கையாகி உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் சுவாச கோளாறுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குப்பைகளை முழுமையாக அகற்றி, அப்பகுதியை சுகாதாரமாக மாற்றி, அங்கு நகராட்சி பூங்கா அமைக்கவும், 2020-ஆம் ஆண்டுக்குள் மயிலாடுதுறையை குப்பைகள் இல்லா நகராட்சியாக மாற்றும் முனைப்புடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம். இதற்காக, மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளில் உருவாகும் குப்பைகளை, 12 வார்டுக்கு 1 என்ற வீதத்தில், ஆனந்ததாண்டவபுரம் சாலை, வண்டிப்பேட்டை, திம்மநாயக்கன் படித்துறை ஆகிய 3 இடங்களில் நுண்ணுயிரி கிடங்கு அமைத்து, தலா 5 டன் வீதம் மொத்தம் 15 டன் குப்பைகள் உரமாக்கப்பட உள்ளது.
இயற்கை உரங்கள்:  மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட 49 பூங்காக்களில், வரதாச்சாரியார் பூங்கா, குமரன் பூங்கா, நேரு பூங்கா, ஆர்பிஎன் நகர் பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களில் ஆன்சைட் கம்போஸ்டு உருவாக்கப்பட்டு, தினசரி தலா அரை டன் குப்பை வீதம் மொத்தம்  3 டன் குப்பைகளை இயற்கை உரமாக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இந்த நுண்ணுயிரி கிடங்குகள் மற்றும் ஆன்சைட் கம்போஸ்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் தினசரி உருவாகும் 16.5 டன் மக்கும் குப்பைகள் (தினசரி மொத்த குப்பை 30 டன்) இங்கேயே தரம்பிரித்து, உரமாக்கப்படும். அதன்பின், ஆனந்ததாண்டவபுரம் குப்பைக் கிடங்கில் குப்பைகளை குவிப்பது அடியோடு நிறுத்தப்படும். 
பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக்க அதிகபட்சம் 45 நாள்கள் பிடிக்கிறது. மக்கும் குப்பைகளுடன் சாணம், சர்க்கரை பாகு, புளித்த தயிர் சேர்த்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, நுண்ணுயிரி கிடங்குகளில் 14 தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.மக்கும் குப்பைகளில் மறுசுழற்சி செய்யமுடியாத பொருள்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 11 டன் அளவுக்கு அரியலூர் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை: திடக்கழிவு மேலாண்மை குறித்து தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் 11 பேர் கடந்த 2 ஆண்டுகளாக வீடு, வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையை குப்பையில்லா நகராட்சியாக மாற்ற தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுள்ளனர் நகராட்சி நிர்வாகத்தினர். நகராட்சி எல்லைக்குள்பட்ட 84 குளங்கள், பழங்காவிரி மற்றும் காவிரி ஆற்றில் குப்பைகளை கொட்டாமல் பராமரித்தாலே விரைவில் மயிலாடுதுறையை குப்பைகள் இல்லா நகராட்சியாக மாற்ற முடியும் என அவர்கள் நம்பிக்கை  தெரிவிக்கின்றனர்.
நகராட்சியின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, மயிலாடுதுறையில் மக்கா குப்பையான நெகிழிப் பொருள்களின் பயன்பாடு, வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை, 2.5 டன் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ள நகராட்சி, தொடர்ந்து நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைக் கண்காணித்து வருகிறது. நகராட்சி எவ்வளவு முனைப்பு காட்டினாலும், அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து செயல்பட்டால் விரைவில் மயிலாடுதுறை தூய்மையான நகராட்சியாக மாறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியது:
மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட 36 வார்டுகளில் தினமும் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காதக் குப்பை மற்றும் அபாயகரமான வீட்டுக் கழிவு என வகைப்படுத்தி, பொதுமக்கள் பிரித்துக் கொடுக்கும்படியும், அவ்வாறு பிரித்து சேகரித்து வைத்திருக்கும் குப்பைகளை, வீடுகளுக்கு வரும் துப்புரவு பணியாளர்களிடம் முறையே ஒப்படைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குப்பைகளை பிரித்துக் கொடுக்காத வீடுகளுக்கும், பொது இடங்களில் போடுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் மயிலாடுதுறை நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படியும், தூய்மையான நகரமாக்க ஆதரவு தருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 கடந்த 01.08.2017 முதல் அமலில் உள்ளதாலும், மேற்கண்ட பிரிவுகளை உதாசீனப்படுத்துபவர்கள் மற்றும் மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com