திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திங்கள்கிழமை நடைபெற்ற 3-ஆம் நாள் நிகழ்ச்சியில் பெரிய பூஜை மடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்தார். பின்னர் ஆதீன கொலு மண்டபத்தில் திருமங்கலக்குடி சுவாமிநாத ஓதுவா மூர்த்திகள் திருமுறை பாடினார். ஸ்ரீமத்அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை தலைவர் பி. மணி, தஞ்சை தமிழ்ப் பல்கலைகழக பேராசிரியர் கோ.ப. நல்லசிவம், திருவாரூர் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஏ. பழனி, சிதம்பரம் நீதிபதி இரா. பார்த்திபன் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.
ஜோதிடர் ஹரிகேசநல்லூர் கே. வெங்கட்ராமனின் ஜோதிடபணியை பாராட்டி அவருக்கு பொற்கிழி ரூ. 5 ஆயிரம் மற்றும் ஜோதிட கலாநிதி எனும் விருதினையும், கும்பகோணம் டி.எஸ். முருகனின் ஆன்மிக பொம்மலாட்ட பணியை பாராட்டி அவருக்கு பொற்கிழி ரூ. 5 ஆயிரம் மற்றும் கைப்பாவை கலாநாயகன் எனும் விருதினையும் ஆதீனம் 24-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். அடுத்து, கோவை சக்திவேல் உரை எழுதி பதிப்பித்த திருப்பாண்டி கொடுமுடி தலபுராணம் நூலை வெளியிட்டார். திருவிடைமருதூர் ஆதீன மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ப.மகாலிங்கம் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஆதீன கட்டளை தம்பிரான்சுவாமிகள் பொது மேலாளர் தெய்வசிகாமணி, கண்காணிப்பாளர் சண்முகம், காசாளர் சுந்தரேசன், ஆதீன வழக்குரைஞர் ராம. சேயோன் மற்றும் சைவ சித்தாந்த பேராசிரியர்கள், ஆதீன கல்வி நிலைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.