அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 55 பேர் கைது
By DIN | Published On : 12th February 2019 09:12 AM | Last Updated : 12th February 2019 09:12 AM | அ+அ அ- |

நாகையில் திங்கள்கிழமை காவல் துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், திருபுவனத்தில் பாமக பிரமுகர் எம். ராமலிங்கம் அண்மையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இக்கொலை சம்பவத்தைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பேரணி மற்றும் கண்டனஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினர். இருப்பினும் காவல் துறை அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து, இந்து முன்னணி நாகை மாவட்டச் செயலாளர் ஆர். செழியன் தலைமையில் நாகை அவுரித் திடலில், பாமக பிரமுகர் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்தனர்.
பாஜக எஸ்.சி அணி சார்பில்: இதைத்தொடர்ந்து, பாஜக எஸ்சி
பிரிவு நாகை மாவட்டத் தலைவர் ஏ.டி. வி. லிங்கன் தலைமையில் அவுரித் திடலில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை சம்பவத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 10 பெண்கள் உள்ளிட்ட 21 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில், இந்து முன்னணி நாகை மாவட்டச் செயலாளர் வி. வேதபிரசாத், விஷ்வ இந்து பரிஷத் மாவட்டப் பொறுப்பாளர் சதானந்தம், பாஜக மாவட்டத்துணைத் தலைவர் எம். வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.