பெட்டிக் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
By DIN | Published On : 12th February 2019 09:16 AM | Last Updated : 12th February 2019 09:16 AM | அ+அ அ- |

நாகையை அடுத்த நாகூரில் உள்ள பெட்டிக் கடைகளில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
நாகூரில் பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் சில பெட்டிக் கடைகளில், அனுமதிக்கப்படாத நிறமிகள் கலந்த மிட்டாய்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குப் புகார் கிடைக்கப் பெற்றது.
இதையடுத்து, நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜி. செல்வராஜ் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.டி. அன்பழகன், டி. சேகர், எம். ஆண்டனி பிரபு, ஆர். மகாதேவன் ஆகியோர் நாகூரில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஒரு கடையில் தயாரிப்பு விவரமில்லாத மற்றும் சந்தேகத்துக்குரிய வகையிலான குளிர்பானங்கள், மிட்டாய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைக்குத் தொடர்புடைய உணவுப் பொருள்களை விநியோகித்த மொத்த விற்பனை நிலையத்திலிருந்து குளிர்பானம் மற்றும் மிட்டாய்கள், பகுப்பாய்வுக்கு எடுக்கப்பட்டன.
இந்த ஆய்வுகளின் போது, தயாரிப்பு விவரம் இல்லாத உணவுப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.