தென்னை பாதிப்புக்கு நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
By DIN | Published On : 12th February 2019 09:13 AM | Last Updated : 12th February 2019 09:13 AM | அ+அ அ- |

வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரி ஊராட்சி, வெள்ளிக்கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இதுவரை நிவரணத் தொகை கிடைக்கவில்லை. குறிப்பாக, சுமார் 176 ஹெக்டேர் தோப்பு புறம்போக்கு வகை நிலத்தில் சுமார் 400 விவசாய குடும்பத்தினர் பல காலமாக வேளாண் தொழில் செய்து வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த தென்னை மரங்கள் கஜா புயலில் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்க வேளாண் துறையினர் கணக்கெடுப்புப் பணியும் காலத்தில் முடிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலம் தோப்பு புறம்போக்கு வகை நிலம் என்பதால் நிவாரணம் வழங்கவில்லை.
இதுகுறித்து, அந்த ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் சீனிவாசன் ஆகியோர் தெரிவித்தது: தோப்பு புறம்போக்கு வகையைச் சேர்ந்த நிலத்தில் விவசாயிகள் பல ஆண்டுகளாக தென்னை சாகுபடி செய்து, ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு ரூ.8 வீதம் அரசுக்கு வரியாக செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு அரசு தூசிமரப்பட்டா அளித்துள்ளது. அரசு அறிவித்த நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்தபடி நிவாரணம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமானால் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.