கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்த நாகை மீனவர்களின் வலைகள் பறிப்பு
By DIN | Published On : 04th January 2019 08:40 AM | Last Updated : 04th January 2019 08:40 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள் துண்டித்து எடுத்துச் சென்றனர்.
வடகிழக்கு பருவகால மீன்பிடி பருவத்தையொட்டி, வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை படகுத்துறையில் வெளியூர் மீனவர்கள் முகாமிட்டு, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இங்கு தங்கியுள்ள தரங்கம்பாடி, பெருமாள்பேட்டையைச் சேர்ந்த ஆ. ஞானவேல் (24), கோ. வீரமணி (52), மு. பிரகாஷ் (24), க. ஜெயக்குமார் (23) ஆகிய 4 பேரும், ப. ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில், புதன்கிழமை கடலுக்குச் சென்றுள்ளனர்.
கோடியக்கரைக்கு அப்பால் கடல்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை மீனவர்கள் எனக் கருதப்படும் சிலர், நாகை மீனவர்கள் விரித்து வைத்திருந்த 300 கிலோ எடையுள்ள வலைகளை அறுத்து எடுத்துச் சென்றனராம். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 4 பேரும் வியாழக்கிழமை காலை கோடியக்கரை திரும்பினர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...