சாலையோரத்தில் 3 கிலோ தங்கக் கட்டிகள்; காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை
By DIN | Published On : 04th January 2019 08:35 AM | Last Updated : 04th January 2019 08:35 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், பொறையாறு அருகே சாலையோரத்தில் கிடந்த 3 கிலோ தங்கக் கட்டிகளை போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புத்தாண்டு தினத்தையொட்டி, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், பொறையாறு அருகே உள்ள நண்டலாறு சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரசுப் பேருந்தில் வந்த மர்ம நபர், காவல் துறையினரைக் கண்டவுடன், தான்வைத்திருந்த தங்கக் கட்டிகளை நண்டலாறு சாலையோரத்தில் உள்ள முட்புதரில் வீசினாராம்.
இதையறிந்த சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் மற்றும் போலீஸார், நண்டலாறு சோதனைச் சாவடி பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பையில் மொத்தம் 3 கிலோ எடையிலான 26 தங்கக் கட்டிகள் முட்புதருக்குள் கிடப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.