சீர்காழி சட்டநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 04th January 2019 08:39 AM | Last Updated : 04th January 2019 08:39 AM | அ+அ அ- |

நிகழாண்டின் முதல் பிரதோஷத்தையொட்டி, சீர்காழி சட்டநாதர் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலிக்கிறார். பிரதோஷத்தையொட்டி, மூலவர் சுவாமி- அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர்- நாயகி பிராகார உலா நடைபெற்றது. இதேபோல், நாகேசுவரமுடையார் கோயில், வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.