தாடாளன் பெருமாள் கோயிலில் சேர்த்தி உத்ஸவம்
By DIN | Published On : 04th January 2019 08:39 AM | Last Updated : 04th January 2019 08:39 AM | அ+அ அ- |

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் பெருமாள்- தாயார் சேர்த்தி உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயணப் பெருமாள் கோயில் சீர்காழியில் உள்ளது. இக்கோயிலில் பெருமாள், லோகநாயகி தாயாருடன் அருள்பாலிக்கிறார். பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் மார்கழி மாதம் இராப்பத்து நிகழ்ச்சி நிறைவைத் தொடர்ந்து, தாடாளன் பெருமாள் லோகநாயகி தாயார் சந்நிதிக்கு எழுந்தருளும் சேர்த்தி உத்ஸவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பெருமாளும் தாயாரும் ஒன்றாக எழுந்தருளி மாலைமாற்றும் ஐதீகம், பெருமாள் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.
இதையொட்டி, தாடாளன் பெருமாளுக்கு தாயார் அலங்காரமும், தாயாருக்கு முத்தங்கிப் பெருமாள் அலங்காரமும் செய்விக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை பட்டாச்சாரியார்கள் பத்ரிநாதன், பிரபு ஆகியோர் செய்தனர்.