வேலை நிறுத்தப் போராட்ட பிரசார இயக்கக் கூட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:37 AM | Last Updated : 04th January 2019 08:37 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்ட பிரசார இயக்கக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். பொதுத் துறையை மூடும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்பப் பெறக்கூடாது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன. 8, 9 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பங்கேற்கவுள்ளதையொட்டி, அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பு வேலை நிறுத்தப் போராட்ட பிரசார இயக்கக் கூட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் தலைமை வகித்தார். புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ப. அந்துவன்சேரல், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் து. இளவரசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலச் செயலாளர் பா. ராணி நன்றி கூறினார்.