கைவினைஞர் முன்னேற்றக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைவினைஞர் முன்னேற்றக் கட்சி சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைவினைஞர் முன்னேற்றக் கட்சி சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கஜா புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மரத்தச்சுப் பட்டறைகள், கொல்லுப் பட்டறைகளை சீரமைக்க அரசு சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு கோரிய புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். தேசிய வங்கிகளில் பாரம்பரிய பொற்கொல்லர்களை நிரந்தர நகை மதிப்பீட்டாளராக நியமனம் செய்ய வேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடன்கள், நகைக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
கருமார், தச்சர், சிற்பி, கன்னார், பொற்கொல்லர், விஸ்வகர்மா கம்மாளர்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்துக்குள்பட்ட கோயில்களில் பராமரிப்பு தொழில்நுட்ப கலைஞர்களாகவும், அர்ச்சகர்களாகவும் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் எஸ். ராஜகுமார் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் எஸ். வரதராஜன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு விஸ்வர்மா முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் ஜி. சேகர், கைவினைஞர் முன்னேற்றக் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் பொன். கனகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.
தச்சர் தொழிலாளர் அணி மாநிலத் தலைவர் அப்பர். லட்சுமணன், கைவினைஞர் முன்னேற்றக் கட்சியின் மாநிலப் பொருளாளர் டி.எஸ்.எம். செந்தில்குமார், மக்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் பி.வி. ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் கே. கோவிந்தராஜ் வரவேற்றார். நாகை நகரச் செயலாளர் ஏ. ஹரிஹரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com