அரசு ஊழியர் சங்கத்தினர் தர்னா போராட்டம்
By DIN | Published On : 03rd July 2019 07:38 AM | Last Updated : 03rd July 2019 07:38 AM | அ+அ அ- |

அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாலை நேர தர்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவரும், ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.சுப்பிரமணியன், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை அரசு ஊழியர் சங்க கட்டடம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டத் தலைவர் ப. அந்துவன் சேரல் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி. மணி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் போராட்ட நோக்கத்தை விளக்கிப் பேசினார்.
வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் து. இளவரசன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். தியாகராஜன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். துர்காம்பிகா, ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநிலப் பொருளாளர் நாகராஜன் மற்றும் அரசு ஊழியர் சங்க வட்டக் கிளைகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் அ. செளந்தரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிறைவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க நாகை வட்டச் செயலாளர் எம். தமிழ்வாணன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் எம். நடராஜன் நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...