மருங்கூரில் 10 ஆண்டுகளாகத் தொடரும் மின் அழுத்த குறைபாடு: புதிய மின்மாற்றி அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 03rd July 2019 09:56 AM | Last Updated : 03rd July 2019 09:56 AM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியம், மருங்கூர் ஊராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காட்சிப் பொருளாக உள்ள மின்மாற்றிக்கான கம்பத்தில், மின்கருவிகளைப் பொருத்தி, பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருங்கூர் ஊராட்சியில் நடுத்தெரு, மேலத்தெரு, காராமணித் தெரு, தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமா 500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்த அழுத்த மின்சாரமே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாகும் நிலை உள்ளது.
மேலும், மின் மோட்டார்களை இயக்க முடியாததால், குடிநீர்த் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் மிக குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வருவதால், மின் விளக்குகளும் சரிவர ஒளிருவதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்தப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் மின் மோட்டார்கள் வைத்துள்ளனர். சீரான மின்சாரம் இல்லாததால், மின் மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பதற்காக, மின் கம்பம் நடப்பட்டு, மின்மாற்றி கருவிகள் வைப்பதற்காக இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டன. ஆனால், இதுவரை மின்மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், இந்த மின்கம்பம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காட்சிப் பொருளாகவே உள்ளது. இப்பகுதி மக்களின் சிரமமும் தொடர்கிறது. எனவே, மருங்கூர் ஊராட்சி பகுதிகளில் நிலவும் குறைந்த மின் அழுத்த குறைப்பாட்டைப் போக்க, காட்சிப் பொருளாக உள்ள மின்கம்பத்தில் புதிய மின்மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...