அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு
By DIN | Published On : 09th June 2019 03:40 AM | Last Updated : 09th June 2019 03:40 AM | அ+அ அ- |

குத்தாலம் அருகேயுள்ள கோனேரிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை புதிதாக சேர்ந்த மாணவர்கள் பரிவட்டம் கட்டி வரவேற்கப்பட்டனர்.
அதிகரித்து வரும் ஆங்கில வழிக் கல்வி மோகம் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. மாணவர்களின் சேர்க்கை சதவீதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், குத்தாலம் வட்டம் கோனேரிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, நிகழாண்டு புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள முதல் வகுப்பு மாணவர்களுக்கு கோனேரிராஜபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை செய்து மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி, ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தற்போது பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் ஆகியோர் மாணவர்களுக்கான கல்விச்சீர் அளித்து, ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், வட்டார கல்வி அலுவலர் பொன். பூங்குழலி, ஊராட்சி முன்னாள் தலைவர் ஏ.எஸ். வேல்முருகன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.