தாட்கோ மேலாளரை தாக்கிய அரசுப் பேருந்து நடத்துநர் மீது வழக்கு
By DIN | Published On : 09th June 2019 03:42 AM | Last Updated : 09th June 2019 03:42 AM | அ+அ அ- |

சீர்காழியில் தாட்கோ மாவட்ட மேலாளரை தாக்கிய அரசுப் பேருந்து நடத்துநர், ஓட்டுநர் மீது காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ மாவட்ட மேலாளராக பணியாற்றி வரூம் சீர்காழி சட்டநாதபுரத்தைச் சேர்ந்த ஜெ. நெப்போலியன் (58) கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகப்பட்டினத்திலிருந்து சிதம்பரம் செல்லும் அரசுப் பேருந்தில் சீர்காழிக்கு சென்றுள்ளார். பேருந்து சீர்காழியை நெருங்கியபோது தான் இறங்கவேண்டிய சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் இறங்கவேண்டும் என நடத்துநரிடம் நெப்போலியன் கூறிய போது, இங்கெல்லாம் நிற்காது என அலட்சியமாக கூறி பேருந்தை நிறுத்தவிடாமல் சென்றுள்ளார். இதையடுத்து, சிறிது தூரம் சென்று சீர்காழி உப்பனாற்று அருகே தனியார் பள்ளி அருகில் பேருந்தை நிறுத்தி பெண் ஆசிரியை ஒருவரை இறக்கிவிட்டதாகவும், இதுகுறித்து, நெப்போலியன் நடத்துநரிடம் பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் பயணியை இறக்கவிட்டீர்கள், பின்பு ஏன் சட்டநாதபுரத்தில் பேருந்தை நிறுத்தவில்லை என கேட்டதாகவும், ஆத்திரமடைந்த நடத்துநர் நெப்போலியனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சீர்காழி பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றவுடன் இறங்கிய நெப்போலியனை பேருந்து ஓட்டுநரும் தாக்க முயன்றதாகவும், அப்போது சக பயணிகள் தடுத்தனராம். இதுகுறித்து, நெப்போலியன் சீர்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.