விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்காக நாகை மாவட்டத்தில் 17 பள்ளி மாணவர் விடுதிகளும், 15 மாணவியர் விடுதிகளும், 2 கல்லூரி மாணவர் விடுதிகளும், 4 கல்லூரி மாணவியர் விடுதிகளும் செயல்படுகின்றன. 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலலாம். பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புப் பயிலும் மாணவ, மாணவியர் கல்லூரி, ஐடிஐ விடுதிகளில் தங்கிப் பயிலலாம். 
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். பத்தாம் வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் இலவசமாக வழங்கப்படும்.
விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும்.  மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையத்துக்கான குறைந்தபட்ச தொலைவு சுமார் 8 கி.மீட்டருக்கும் அதிகமாக இருக்க வேண்டும். மாணவியருக்கு இந்தத் தொலைவு விதி பொருந்தாது.
இதற்கான விண்ணப்பங்களைத் தொடர்புடைய விடுதி காப்பாளர்களிடமிருந்து பெறலாம் அல்லது நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து பெறலாம். 
பள்ளி விடுதிகளுக்கான விண்ணப்பங்களை ஜூன் 20-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கான விண்ணப்பங்களை ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் விடுதிக் காப்பாளர்கள், காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  
விண்ணப்பத்துடன் சாதி மற்றும் வருமானச் சான்று ஆகியவற்றை இணைக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது அந்தச் சான்றுகளை அளித்தால் போதுமானது என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com