ஏழைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு: இன்று நடைபெறுகிறது
By DIN | Published On : 14th June 2019 10:52 AM | Last Updated : 14th June 2019 10:52 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம், ஜூன் 13 : நாகை, காடம்பாடியில் உள்ள ஏழைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை நடைபெறுகிறது.
வெளிப்பாளையம், காடம்பாடியில் உள்ள ஏழைப்பிள்ளையார் கோயில், நாகையில் உள்ள ஆன்மிகப் புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில், அருளும் விநாயகருக்கு கல்யாணசுந்தர விநாயகர் என்ற திருப்பெயரும், ஏழைப்பிள்ளையார் என்ற திருப்பெயரும் விளங்குகின்றன. இக்கோயிலின் குடமுழுக்கு விழா, வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது.
இதையொட்டி, வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையின் நிறைவில், மகா பூர்ணாஹுதியும், அதைத் தொடர்ந்து கடம் புறப்பாடும் நடைபெறுகின்றன. காலை 9. 45 மணிக்கு ஏழைப்பிள்ளையார் கோயில் விமான மகா குடமுழுக்கும், 10 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான குடமுழுக்கும் நடைபெறுகின்றன.