சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th June 2019 10:39 AM | Last Updated : 14th June 2019 10:39 AM | அ+அ அ- |

தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு) சார்பில், நாகை அவுரித்திடலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யு. நாகை மாவட்டத் துணைத் தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ வி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் சீனி. மணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ. தெட்சணாமூர்த்தி, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த குருசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். சி.ஐ.டி.யு. நாகை மாவட்டப் பொருளாளர் ஏ.சிவனருள்செல்வன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.