தடைக்காலம் இன்றுடன் நிறைவு: மீன்பிடிப்புக்கு தயாராகும் விசைப்படகு மீனவர்கள்
By DIN | Published On : 14th June 2019 10:53 AM | Last Updated : 14th June 2019 10:53 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம், ஜூன் 13 : மீன்பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதையொட்டி, நாகை மாவட்ட விசைப் படகு மீனவர்கள், மீன்பிடிப்புக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும், கடல் மீன் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி வரையிலான 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலமாக அறிவிக்கப்
பட்டது.
மீன்பிடித் தடை காரணமாக, விசைப் படகுகள் மூலமான மீன்பிடிப்பு கடந்த 61 நாள்களாகத் தடைபட்டிருந்தது. இதனால், ஏப்ரல் 17-ஆம் தேதியிலிருந்து மீன் உணவுத் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.
ஃபைபர் படகுகள் மூலமான மீன்பிடிப்பு உள்ளூர் மீன் உணவுத் தேவையைக் கூட முழுமையாகப் பூர்த்தி செய்ய இயலாத நிலையிலேயே இருந்தது. விசைப் படகு மீன்பிடிப்பு மூலம் மட்டுமே கிடைக்கக் கூடிய சில உயர் வகை மீன்கள் கிடைக்காதது, அசைவப் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வந்தது.
மேலும், கடந்த 60 நாள்களாக மீன் ஏற்றுமதியும், மீன்பிடித் தொழில் சார்ந்த ஐஸ் கட்டி உற்பத்தியும் முடக்கமடைந்திருந்தது. விசைப் படகு மீனவர்கள், ஐஸ் கட்டி உற்பத்தித் தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள் என மீன்பிடித் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்புகளை இழந்திருந்தனர்.
இந்த நிலையில், 61 நாள்கள் நீடித்த மீன்பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, விசைப் படகுகள் மூலமான மீன்பிடிப்புக்கு மீனவர்கள் வியாழக்கிழமை தீவிரமாக ஆயத்தமாகினர். அதேபோல, புதன்கிழமை முதல் ஐஸ் கட்டி உற்பத்தியும் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.
வியாழக்கிழமை காலை முதல் சுமையேற்றும் வாகனங்கள் மூலம் ஐஸ் கட்டிகள், டீசல் ஆகியன படகுத் துறைக்குக் கொண்டு செல்லப்பட்டு விசைப் படகுகளில் நிரப்பப்பட்டன. மேலும், மீன்பிடி வலைகள், மீன்பிடித் தொழிலாளர்களின் உணவுத் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருள்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவைகளையும் படகுகளில் ஏற்றும் பணிகளில் மீனவர்கள் விறுவிறுப்புக் காட்டினர்.
சனிக்கிழமை அதிகாலை முதல் மீன்பிடிப்புக்குக் கடலுக்குச் செல்லும் விசைப் படகுகள், மீன்பிடிப்பை முடித்துக் கொண்டு 3 அல்லது 4 நாள்களில் கரை திரும்பும் என்பதால், வரும் வாரத்தில் மீன் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரைக்காலில்...
காரைக்கால், ஜூன் 13: காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் தங்களது படகுகளை நிறுத்தி, என்ஜின் சீரமைப்பு, வண்ணம் பூசுதல், வலை பின்னுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். சுமார் 300 படகுகளுக்கு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளிக்கிழமையுடன் தடைக் காலம் நிறைவடையும் நிலையில், பிற்பகல் 3 மணி முதல் கடலுக்குப் புறப்பட படகுகளுக்கு சில மீனவர்கள் வியாழக்கிழமை பூஜை செய்தனர். படகுகளில் டீசல் நிரப்பும் பணிகளையும், ஐஸ் பார் ஏற்றும் பணிகளையும் பெரும்பான்மையாக நிறைவு செய்தனர்.
நிவாரணம்: இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, "குடும்பத்துக்கு தடைக்கால நிவாரணம் ரூ.4 ஆயிரம் மற்றும் படகுக்கான சீரமைப்பு நிவாரணம் ரூ.20 ஆயிரம் என கடந்த ஆண்டுகளில் தரப்பட்டது. இந்த நிலையில், மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை அரசு இதுவரை அளிக்கவில்லை. எங்களது சொந்த நிதியில் சீரமைப்புப் பணியை முடித்துள்ளோம். நிவாரணத் தொகைக்கான விண்ணப்பங்களை மீனவளத்துறை தற்போதுதான் மீனவர்களிடமிருந்து பெற்றுவருகிறது. பரிசீலனையை விரைவாக முடித்து உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும்' என்றனர்.
இன்று முதல் ஆழ்கடலுக்குப் புறப்படும் மீனவர்கள் 17, 18-ஆம் தேதி வாக்கில் கரை திரும்புவர். அதன் பின்னர் படிப்படியாக பெரிய வகை மீன்கள் வரத்து ஏற்பட்டு, சந்தைக்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம் கடந்த 2 மாதங்களாக நிலவு வந்த மீன்கள் விலை அடுத்த சில நாள்களில் ஓரளவுக்கு குறைய வாய்ப்புண்டு என மீனவர்கள்
தெரிவித்தனர்.