மயிலாடுதுறை, சீர்காழியில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள்
By DIN | Published On : 14th June 2019 10:39 AM | Last Updated : 14th June 2019 10:39 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட நகரங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை வட்டத்தில் 1428-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சியான ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எம்.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை வருவாய் சரகத்துக்கு உள்பட்ட பொன்னூர், மகாராஜபுரம், அருண்மொழித்தேவன், மணக்குடி, வெள்ளாலகரம், திருஇந்தளுர், ப. மாப்படுகை, சோழம்பேட்டை, ஆணைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்டமங்கலம் ஆகிய 12 வருவாய் கிராமங்களின் வருவாய்த் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. நிகழ்ச்சியில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை விண்ணப்பங்களை தனித்துணை ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 105 மனுக்களில் 8 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதில், மயிலாடுதுறை வட்டாட்சியர் மலர்விழி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நாகலெட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் வைத்தியநாதன், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழியில்...
சீர்காழி, ஜூன் 13: சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் 5-ஆவது நாளாக வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.
சீர்காழி வட்டத்துக்கு உள்பட்ட பச்சைபெருமாநல்லூர், ஆர்ப்பாக்கம், உமையாள்பதி, கடவாசல் உள்ளிட்ட 10 கிராமங்களின் வருவாய்த் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. வருவாய் கோட்டாட்சியர் இ. கண்மணி தலைமை வகித்தார். இதில் பொதுமக்களிடம் இருந்து 135 மனுக்கள் பெறப்பட்டு, 56 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 6 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. இதில் சீர்காழி வட்டாட்சியர் எஸ்.சபீதாதேவி, தனி வட்டாட்சியர்கள் என்.பி. இந்துமதி, ராணி, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் காந்திமதி, மண்டல துணை வட்டாட்சியர் பாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.