3 குடிசை வீடுகள் தீக்கிரை: ஆட்சியர் நிவாரண உதவி
By DIN | Published On : 14th June 2019 10:53 AM | Last Updated : 14th June 2019 10:53 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம், ஜூன் 13: நாகையில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாகின.
நாகை டவுன், வ.உ.சி. நகர் பவுண்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மனைவி பரமு. கூலித் தொழிலாளி. இவரது குடிசை வீடு மின்கசிவு காரணமாக வியாழக்கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து தீ பரவி அருகிலிருந்த அகிலா, ரகுநாதன் ஆகியோர்களது குடிசை வீடுகளும் தீக்கிரையாகின.
இந்த தீ விபத்தில் 3 வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் கருகின. தகவலறிந்த நாகை தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
ஆட்சியர் ஆறுதல் : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் நேரில் சந்தித்து, உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அப்போது வட்டாட்சியர் சங்கர், வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.