480 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
By DIN | Published On : 06th March 2019 07:02 AM | Last Updated : 06th March 2019 07:02 AM | அ+அ அ- |

நாகையில் அமைக்கப்பட்டுள்ள ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகத்திலிருந்து 480 ஆமை குஞ்சுகளை வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை கடலில் விட்டனர்.
கடல் காவலன் எனப்படும் ஆலிவ் ரிட்லி ஆமைகள், அரிய வகை உயிரினமாகக் கருதப்படுகிறது. ஆழ்கடலில் வாழக் கூடிய இந்த வகை ஆமைகள், நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் இந்திய கடலோரப் பகுதிகளில் இனப்பெருக்கம் மேற்கொள்கின்றன. குறைந்து வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் வகையில், கடற்கரையிலிருந்து ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரித்து கடலோரப் பகுதிகளில் உள்ள பொறிப்பகங்களில் அந்த முட்டைகளைப் பாதுகாத்து, குஞ்சு பொறிக்கச் செய்து கடலில் விடும் பணியை வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
187 கி.மீ நீளம் கொண்ட நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளிலிருந்து வனத் துறை மூலம் சேகரிக்கப்பட்ட 17 ஆயிரம் ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் நாகை, சீர்காழி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 8 பொறிப்பகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த முட்டைகளிலிருந்து வெளியாகும் ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகளை, சரியான தட்ப வெப்பம் நிலவும் நாளில் கடலில் விடும் பணியை வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, நாகை சாமந்தான்பேட்டை பகுதியில் 480 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட வனக் காப்பாளர் நாகாசதீஷ் கிடிஜலா தலைமையில், வனத் துறை பணியாளர்கள், மீனவர்கள் இப்பணியை மேற்கொண்டனர். இயற்கை சீற்றங்கள் மற்றும் மாறுபட்ட தட்பவெப்பம் காரணமாக, கடந்த ஆண்டை விட நிகழாண்டில், ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்கம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.