பரிமள ரெங்கநாதர் கோயிலில் தேர்த் திருவிழா
By DIN | Published On : 22nd March 2019 09:31 AM | Last Updated : 22nd March 2019 09:31 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை திருஇந்தளுரில் எழுந்தருளியுள்ள பரிமள ரெங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதர் கோயில் தேர்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கோயில் 108 திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்த பெருமைக்கும் உரியது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, தாயார் மற்றும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், கோயிலில் இருந்து ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சுகந்தவனநாதர் உத்ஸவ மூர்த்திகள் தேரில் எழுந்தருளி, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...