வைத்தீஸ்வரன்கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 22nd March 2019 09:28 AM | Last Updated : 22nd March 2019 09:28 AM | அ+அ அ- |

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில், பங்குனி பிரமோத்ஸவம் மார்ச் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கிருத்திகை மண்டபத்தில் விநாயகர், வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேசுவர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தங்க மயில் வாகனத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியும், காமதேனு வாகனத்தில் சுவாமி- அம்பாளும், மூஷிக வாகனத்தில் விநாயகர் என பஞ்சமூர்த்தி சுவாமிகள் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வீதியுலா முடிந்து கோயில் சித்தாமிர்த தீர்த்தக்கரைக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவியப் பொடி, பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...