வேதாரண்யம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட அப்பகுதி மக்கள் முயன்றனர்.
வேதாரண்யம் அருகே தென்னடார் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகப் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குடிநீர் நிறுத்தப்பட்டதால், சுகாதாரமற்ற தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்திய தென்னடார் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர்.
இருப்பினும், இப்பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் சீராக விநியோகம் இதுவரை செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தகட்டூர் கடை வீதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாய்மேடு காவல் ஆய்வாளர் சுகுணா உள்ளிட்ட போலீஸார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வண்டுவாஞ்சேரி பகுதியில் செயல்படும் நீரேற்று பணிமனையிலிருந்து தென்னடார் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியல் முடிவை விலக்கிக் கொண்டனர். மேலும், துரிதமாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.