மாவட்ட ஆட்சியர் தேர்தல் முகாம் அலுவலகத்தை மயிலாடுதுறைக்கு மாற்றக் கோரிக்கை
By DIN | Published On : 28th March 2019 06:27 AM | Last Updated : 28th March 2019 06:27 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான, நாகை மாவட்ட ஆட்சியரின் தேர்தல் முகாம் அலுவலகத்தை மயிலாடுதுறைக்கு மாற்ற வேண்டும் என்று, நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் இராம.சேயோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
2019 மக்களவைத் தேர்தலில், மயிலாடுதுறை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக தாங்கள் நியமிக்கப்பட்டு, தங்கள் அலுவலகத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தி வருகிறீர்கள். தங்கள் அலுவலகம் செயல்படும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வரையறைக்குள் இல்லை. தொகுதிக்குள் வராத ஒரு இடத்தில், தேர்தல் நடத்தும் அலுவலகம் செயல்படுவது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மட்டும்தான்.
தாங்கள் நாகப்பட்டினத்தில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தை நடத்தி வருவது அரசியல் கட்சிகளுக்கும், பொது மக்களுக்கும் சிரமமாக உள்ளது. மேலும், தங்களை தேர்தல் பணி நிமித்தமாக சந்திக்க வேண்டுமெனில், மயிலாடுதுறையில் இருந்து 60 கி.மீ. தொலைவுக்கு செல்லவேண்டியுள்ளது.
மேலும், மற்றொரு மாநிலமான புதுவைச் சேர்ந்த காரைக்காலையோ அல்லது மற்றொரு மாவட்டமான திருவாரூரைத் தாண்டியோ வர வேண்டி உள்ளது. மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வாகன அனுமதியோ, கூட்ட அனுமதியோ பெறுவதில் கால விரயம் ஏற்படுகிறது.
ஆகவே, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ள நாகை மாவட்ட ஆட்சியர், தேர்தல் முடியும்வரை மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில், தங்களின் முகாம் அலுவலகத்தை அமைத்து பணியாற்ற கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...