அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்
By DIN | Published On : 30th March 2019 08:36 AM | Last Updated : 30th March 2019 08:36 AM | அ+அ அ- |

வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் (கல்வி சீர்) வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் காளீஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பண்டேரிநாதன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் மாரியப்பன், ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். கிராமத்தினரால் ரூ. 2 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள் பள்ளிக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டன.
வண்டலூர் பள்ளிக்கு...
நாகை மாவட்டம், வண்டலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சீர்வரிசையாக கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள், தொலைக்காட்சிப் பெட்டி, அரசியல் தலைவர்களின் படங்கள், நாற்காலிகள், தண்ணீர் கேன்கள், மின்விசிறி, குப்பைத் தொட்டி என சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து பள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இப்பொருள்களை வட்டாரக் கல்வி அலுவலர் ரவி பெற்றுக்கொண்டார். பள்ளித் தலைமையாசிரியர் கீதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...