நுண்ணுயிரி கிடங்கு கட்டுமானப் பணி தடுத்து நிறுத்தம்
By DIN | Published On : 30th March 2019 08:34 AM | Last Updated : 30th March 2019 08:34 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை மீறி நடைபெற்ற நுண்ணுயிரி கிடங்கு கட்டுமானப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில், தருமபுரம் ஆதீன மகப்பேறு மருத்துவமனை, மாயூரநாதர் கோயில், பள்ளிவாசல், பள்ளிகள் மற்றும் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் நுண்ணுயிரி கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்பிரச்னை தொடர்பாக நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் ஆர். மலர்விழி தலைமையில் வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தேர்தல் முடியும் வரை நுண்ணுயிரி கிடங்கு அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும், தேர்தலுக்குப் பின்னர் நுண்ணுயிரி கிடங்கு அமையவுள்ள இடத்தை வட்டாட்சியர் ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி, சுமுக முடிவு காண்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனால், முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் பணியாளர்கள் நுண்ணுயிரி கிடங்குக்கு பில்லர் அமைக்கும் பணியைத் தொடர்ந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், திரண்டுவந்து கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை மற்றும் போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, தேர்தல் முடியும் வரை கட்டுமானப் பணியை தொடரக் கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...