பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் பாடுபடுவேன்: ஓய்வூதியர் கட்சி வேட்பாளர் வாக்குறுதி
By DIN | Published On : 30th March 2019 08:38 AM | Last Updated : 30th March 2019 08:38 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் பாடுபடுவேன் என்று மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் ஓய்வூதியர் கட்சி வேட்பாளர் வாக்குறுதியளித்துள்ளார்.
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி சார்பில், அதன் தஞ்சாவூர் மாவட்டத் தலைவரான யு. ஹபீப் முகமது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகளை நம்பி களத்தில் இறங்கியுள்ளேன். இத்தொகுதியில், இஸ்லாமியர்களுக்கு 1லட்சத்து 45ஆயிரம் வாக்குகள் உள்ளன. மேலும், இத்தொகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். பாஜக அரசின் இஸ்லாமியர்கள், தலித் இன மக்களின் மீதான பார்வை சரியாக இல்லை. இவர்களின் வாக்குகள் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தலில்
போட்டியிடுகிறேன்.
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை தொகை ரூ.5 லட்சத்தை பெற்றுத்தர முயற்சிப்பேன். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த போராடுவேன். எனது தொகுதிக்குள்பட்ட இடத்தில் விவசாயக் கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன் என்றார்.
இந்த பேட்டியின்போது, வழக்குரைஞர்கள் கார்த்திக்குமார், நாகரெத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...