புயலால் கடல் நீர் புகுந்து பாதித்த நிலங்களை மீட்டுருவாக்கம் செய்யப் பயிற்சி
By DIN | Published On : 05th May 2019 05:46 AM | Last Updated : 05th May 2019 05:46 AM | அ+அ அ- |

வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் கடல் நீர் புகுந்து பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மீள் உருவாக்கம் செய்வது குறித்து சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. உப்பு நீரால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சீரமைப்பது தொடர்பாக இம்முகாமில் விளக்கமளிக்கப்பட்டது. இதில் புஷ்பவனம், வானவன்மாதேவி, நாலுவேதபதி உள்பட சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இன்ஸ்பயர் அமைப்பு மற்றும் இன்போஸிஸ் பவுண்டேஷன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த முகாமில், இன்ஸ்பயர் அமைப்பின் இயக்குநர் ரேவதி பேசியது: உப்பு நீர் பாதித்த நிலங்களை சீரமைத்து, தக்கைப்பூண்டுகளை பயன்படுத்தி மீள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இன்போசிஸ் பவுண்டேஷனுடன் இணைந்து பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் குளங்கள் வெட்டவும்,1 லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகளை நடவும் திட்டமிடப்பட்டுள்ளோம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் இன்ஸ்பயர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.