மாணவர்களுக்கு இலவச டேக்வாண்டோ பயிற்சி
By DIN | Published On : 05th May 2019 05:46 AM | Last Updated : 05th May 2019 05:46 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஓஎன்ஜிசி சார்பில் இலவச டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று நரிமணம் ஓஎன்ஜிசியின் காவிரி அசட் மேலாளரும், நிர்வாக இயக்குநருமான வி.வி. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருமருகல், திருக்கண்ணபுரம், திட்டச்சேரி, கணபதிபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டம், விழிதியூர், ஊழியப்பத்து ஆகியப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு ஓஎன்ஜிசி சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டேக்வாண்டோ பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுச்சேரியில் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற டேக்வோண்டோ போட்டியில் திருமருகல் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களைப் பெற்றனர்.
கடந்த ஆண்டுபோல், நிகழாண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச டேக்வாண்டோ பயிற்சியளிக்கவுள்ளது. எனவே, நிரவு ஓஎன்ஜிசி விளையாட்டு மைதானத்தில் மே 5 முதல் 31-ஆம் தேதி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறவுள்ள இலவச டேக்வாண்டோ பயிற்சியில், 5 முதல் 18 வயது வரையுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது எனதெரிவித்துள்ளார்.