வைக்கோல் கட்டுகள் ஏற்றிச் செல்லும் லாரிகளால் இடையூறு
By DIN | Published On : 05th May 2019 05:44 AM | Last Updated : 05th May 2019 05:44 AM | அ+அ அ- |

திருக்குவளை பகுதியில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருக்குவளை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற அறுவடையின்போது, வைக்கோல் விலை குறைவாக இருந்ததால் பெரும்பாலானோர் வைக்கோல்களை விற்கவில்லை. இந்நிலையில், தற்போது, இந்த வைக்கோல்களை தொழிற்சாலை பயன்பாட்டிற்காக லாரிகளில் வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு, வைக்கோல் கட்டுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள், அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதால், மின் கம்பிகளில் உரசி தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கிராமத்தின் குறுகலான சாலையில் வைக்கோல் பாரத்துடன் லாரி வரும்போது எதிரே வருபவர்கள் சாலையோரமாக நிற்ககூட இடம் இல்லாத நிலை உள்ளது. எனவே, வைக்கோல்களை குறிப்பிட்ட அளவுடன் லாரிகளில் ஏற்றிச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.